துறைமுக வரலாறு

தூத்துக்குடி வரலாறு

 

தூத்துக்குடி குறித்த மிகப் பழமையான குறிப்பு கிபி 88 இல் ‘எரித்ரியன் கடலின் பெரியுப்ளஸ்’ (Periuplus of the Erythrean Sea) என்னும் கிரேக்க இலக்கியத்தில் காணப்படுகிறது. மேலும் கிபி 124 இல் டோலமி என்பவர் முத்துக் குளியல், சோசிகௌரய், கோல்கோய் மற்றும் சோலன் முகத்துவாரத்தில் வாணிக மையம் ஆகியவை அமையப் பெற்ற ‘கோல்கிக் வளைகுடாவில் கரியோய் நாடு (Country of Kareoi, in the Kolkhic Gulf) என்றும் இதனைக் குறிக்கிறார். டோலமி குறிப்பிட்ட சூசிகௌரய்தான் தற்போதைய தூத்துக்குடி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் கிபி 200 முதல் 1000 வரை தூத்துக்குடி குறித்த எந்த ஆய்வுக் குறிப்பும் காணப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் உருவான தேவாரம், சீவக சிந்தாமணி மற்றும் பெரிய புராணம் உள்ளிட்ட இலக்கியங்களில் முத்துக்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் இல்லை. மதராஸ் அரசுக்கு ஜேம்ஸ் ஹார்நெல் அளித்த அறிக்கையில் தூத்துக்குடி மற்றும் மன்னார் வளைகுடா முத்துக் குளிப்புப் பற்றி விளக்கி உள்ளார். தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுப் பதிவுகளில் கொற்கை மற்றும் புகார் துறைமுகங்கள், தூத்துக்குடி முத்துக் குளிப்பு மற்றும் முத்து வர்த்தகம் குறித்த செய்திகள் உள்ளன.

 

இந்தியாவின் சுதந்திரத்தில் தூத்துக்குடியின் பங்கு

 

கிபி 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்களாலும், கிபி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை சோழ அரசர்களாலும் இப்பகுதி ஆளப்பட்டு வந்தது. பல கப்பல்கள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்படும இயற்கைத் துறைமுகமாக விளங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் போர்சுகல், ஹாலந்து மற்றும் பிரிட்டன் பல்வேறு கால கட்டங்களில் இந்தியாவை ஆண்டனர். 1532 இல் போர்சுகீஸியர் தூத்துக்குடியில் வந்து இறங்கினர். 1649 இல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றினார்கள். 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு ஆங்கிலேயப் பயணிகள் தூத்துக்குடி குறித்துத் தங்க்ள் கருத்துக்களை அழகாகப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ஃபிலிப் பால்தேயஸ் என்னும் ஆங்கிலேயப் பாதிரியின் கருத்துகள் விவரமானவை. டச்சுக்கார்ர்கள் ஆட்சியில் தூத்துக்குடியில் முத்துக் குளிப்பு வர்த்தகம் சிறந்து விளங்கியது என ஜீன் டே லாகோம் எழுதியுள்ளார். இறுதியில் 1825 ஜூன் 1 ஆம் தேதி தூத்துக்குடி, காயல்பட்டினம், புன்னக்காயல், மணப்பேடு ஆகியவை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.